இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் அடுத்த மாதம் மூன்றாம் தேதி தொடங்குகிறது.
இதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் வரும் 29-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர் முகமது சமியின் விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்து விட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியவந்தது.
தன்னை கொடுமைப்படுத்தியதாக சமியின் மனைவி ஹசின் ஜகான் அளித்த புகாரின் பேரில், முகமது சமி மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சமியின் விசா விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டதை அறிந்த இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் வழக்கு தொடர்பாக போலீசாரிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் டெல்லியில் உள்ள அமெரிக்க உயர் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தியாவுக்காக விளையாடும் முகமது சமியின் சில சாதனைகளையும் குறிப்பிட்டு அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் எழுதிய இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அவரது விசா விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு பரிந்துரை செய்தனர்.
இதைதொடர்ந்து, முகமது சமி அமெரிக்கா சென்று விளையாடுவதற்கு வசதியாக அவருக்கு தற்போது விசா அளிக்கப்பட்டது.