இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகளாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இதன்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.
இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக மத்திய மந்திரி அனுராக் தாகூரின் தம்பியும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம், துணை தலைவராக மஹிம் வர்மாவும் பொறுப்பேற்கிறார்கள். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பதை தொடர்ந்து கடந்த 33 மாதங்களாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட நிர்வாக பணிகளை கவனித்து வந்த வினோத்ராய் தலையிலான நிர்வாக கமிட்டியின் செயல்பாடு முடிவுக்கு வருகிறது.
பொதுக்குழு கூட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘பொதுக்குழு கூட்டத்தில் முதலில் கடந்த 3 ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். அடுத்து தேர்தல் அதிகாரி, புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பார். நாளைய நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கங்குலியுடன் இன்று (நேற்று) கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளன.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி எல்லா விஷயங்களும் நடந்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தான் எங்களை இந்த பணிக்கு நியமித்தது. கோர்ட்டு உத்தரவின்படியே நாங்கள் இந்த பணியில் இருந்து விடுபடுகிறோம். கோர்ட்டு உத்தரவின்படி தான் எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. எங்களுக்கு என்ன பணி கொடுக்கப்பட்டதோ? அதனை நாங்கள் செய்தோம்’ என்றார்.