Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி 24 ஆம் தேதி அயர்லாந்து செல்கிறது

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுடன் 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் 48 ரன்னிலும், 4-வது ஆட்டத்தில் 82 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

தொடரை நிர்ணயம் செய்வதற்கான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரில் நேற்று நடந்தது. இந்த ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன.

இந்திய அணி அடுத்து அயர்லாந்துக்கு சென்று இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வருகிற 24- ந் தேதி அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது. முதல் போட்டி 26-ந் தேதியும், 2-வது ஆட்டம் 28-ந் தேதியும் டூப்ளின் நகரில் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்வதில் இந்த தொடரும் முக்கிய பங்கு வகிக்கும். ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியினரின் விளையாட்டு திறனை நேரில் பார்வையிடுவது, தேர்வு குழு தலைவரும், முன்னாள் வேகப்பந்து வீரருமான சேட்டன் சர்மாவும் வீரர்களோடு செல்கிறார். இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க தொடரில் ஆடிய ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இந்த தொடரில் ஆடவில்லை. காயத்தில் இருந்து குணமடையாததால் லோகேஷ் ராகுலும் ஆடவில்லை. இதனால் அயர்லாந்து பயணத்துக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் விளையாடும் ஒரே புதுமுக வீரர் ராகுல் திரிபாதி ஆவார். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் வருமாறு:- ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), புவனேஷ்குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல், உம்ரான் மாலிக்.