X

இந்திய கிரிக்கெட் அணி ராணுவ தொப்பி அணிந்த விவகாரம்! – முற்றுப்புள்ளி வைத்த் ஐ.சி.சி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ தொப்பி அணிந்து விளையாடினார்கள். இந்தப் போட்டிக்கான சம்பளத்தையும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் ராஞ்சி போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்ததற்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெமூத் குரேஷி கூறுகையில், ”இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணிக்குரிய தொப்பியை தவிர்த்து ராணுவ தொப்பியை அணிந்து விளையாடியதை உலகமே பார்த்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இதை பார்க்கவில்லையா?. இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐ.சி.சி.யின் பொறுப்பு” என்றார்.

பாகிஸ்தான் தகவல்துறை மந்திரி பவாத் சவுத்ரி, “ராணுவ வீரர்களின் தொப்பியுடன் இந்திய வீரர்கள் வலம் வந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “இது வெறும் கிரிக்கெட் அல்ல. ஜென்டில்மேன் விளையாட்டில் அரசியல் கலக்கப்பட்டு இருக்கிறது. இதன் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று பதவிட்டிருந்தார்.

மேலும் அவர் ”இதுபோன்ற செயலை இந்திய அணி நிறுத்திக் கொள்ளாவிட்டால், காஷ்மீரில் இந்தியர்களின் அத்துமீறலை உலகுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள். இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் முறைப்படி புகார் கொடுக்க வேண்டும்” என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான இன்ஜமாம் உல்-ஹக் கூறுகையில், ”நான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். கிரிக்கெட் மட்டுமே எனது பணி. இது அரசியல் விவகாரம். இதில் தலையிட நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் கிரிக்கெட்டையும், அரசிலையும் ஒன்றாக கலக்கக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் “ராணுவ தொப்பியை பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே ஐ.சி.சி.யிடம் ஆலோசனை நடத்தியது. இது விதிமீறல் அல்ல என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த விசே‌ஷ தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்தனர். இது நலநிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும்” என்று ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.