இந்திய கிரிக்கெட் அணி தலை சிறந்த அணியாக திகழ அதன் கட்டமைப்பு தான் காரணம் – இம்ரான் கான் கருத்து

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகின் தலைசிறந்த அணியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த அணியால் உலக அணிகளுக்கு சமமாக ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. ஆசிய கண்டத்தில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி எது என்றால், அது பாகிஸ்தானாகத்தான் இருந்தது.

அதே சமயம் இந்திய அணி தலைசிறந்த அணியாக தற்போது விளங்கி வருகிறது. இதற்கு இந்தியாவின் கிரிக்கெட் கட்டமைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் தான் காரணம் என பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இம்ரான் கான் கூறுகையில் ”தற்போது இந்தியாவை பார்த்தீர்கள் என்றால், உலகின் டாப் அணியாக திகழ்கிறது. ஏனென்றால், நாம் அவர்களைவிட திறமையானவர்களை பெற்றிருந்த போதிலும், அவர்கள் அவர்களுடைய கட்டமைப்பில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

அதேபோல் பாகிஸ்தானிலும் கட்டமைப்பை வலுப்படுத்தி அணியை தயார் செய்ய சிறிது காலம் பிடிக்கும். ஆனால், பாகிஸ்தான் அணி உலகின் சிறந்த அணியாகும் என்பதை நான் நம்புகிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தற்போது கிரிக்கெட் பற்றி யோசிக்க நேரம் கிடைப்பதில்லை. போட்டியை கூட பார்ப்பதில்லை. ஆனால், தற்போது எங்களுடைய கிரிக்கெட் கட்டமைப்பு மாற்றம் அடைந்துள்ளது. இது மெதுவாக முன்னேற்றம் அடையும்” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools