Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியை எச்சரித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி

இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தொடரை இழந்தது. 2 போட்டிகளில் டிரா ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியில் வெற்றி பெற்றது.

இதே மன நிலையில் தான் இந்தியாவுடனான 5-வது டெஸ்ட்டில் விளையாடுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் என இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்திய அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

5-வது டெஸ்ட் போட்டியை கடந்த ஆண்டே முடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் என உணர்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இழப்பதற்கு ஏதும் இல்லை என்று தெரிந்தபிறகு பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவராக மாறி விடுவார்.

இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும். இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய போது புது பந்தில் கேஎல் ராகுல் – ரோகித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். தற்போது கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.

இங்கிலாந்து அணி இதற்கு முன்பு ஜோரூட் தலைமையில் 17 டெஸ்ட்டில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளருடன் டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதல் தொடரில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

பென் ஸ்டோக்ஸின் சிறந்த விஷயம் என்னவென்றால் வீரர்கள் இங்கிலாந்துக்காக சிரித்த முகத்துடன் விளையாட வேண்டும் என்று அவர் விரும்புவார். பயப்பட ஒன்றுமில்லை. உங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுங்கள். இந்த வேலை செய்தால் அது அணிக்கு சிறந்ததாகும். ஆனால் எப்படி விளையாட வேண்டும் என்பதை எண்ணி பயப்பட வேண்டாம். கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு உங்களுக்கு இருந்தால் அது பெரிய விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.