இந்திய கிரிக்கெட் அணிக்கான முதன்மை ஸ்பான்சருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்தது. அதேநேரம், அந்த பிரிவில் விண்ணப்பிக்க குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.
அதன்படி, விளையாட்டு வீரர்களுக்கான ஆடை உற்பத்தியாளர், போதை பொருட்கள், பந்தயம், கிரிப்டோகரன்சி, பணத்தை வைத்து விளையாடும் போட்டி (ஃபேண்டசி கேமை தவர), புகையிலை, ஆபாசப்படங்கள் மற்றும் மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தக்கூடிய வகையிலான துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், பிசிசிஐயின் முதன்மை ஸ்பான்சருக்கான ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான ஆடை உள்ளிட்ட உபகரணங்களை தயாரித்து வரும், அடிடாஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஒரு விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என்பதால், அந்த துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 26-ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்பவர்கள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஏலத்திற்கு தகுதியுடையவர்கள். விண்ணப்பம் வாங்குவதால் மட்டும் எந்த ஒரு நபராலும் ஏலத்தை எடுக்க முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கான முதன்மையான ஸ்பான்சர் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சஹாரா தான். அதைதொடர்ந்து பல நிறுவனங்கள் மாறிவிட்டது. இறுதியாக பைஜுஸ் நிறுவனம் இந்திய அணியின் முதன்மை ஸ்பான்சராக இருந்தது.