Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பையுடன் முடிகிறது.

20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. இந்த போட்டிக்கு பிறகு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் ராகுல் டிராவிட்டை சந்தித்தனர். அப்போது அவர் பயிற்சியாளராக இருக்க ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ராகுல் டிராவிட் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராவது உறுதியாகி விட்டது. அவர் விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்றார்.

ராகுல் டிராவிட் 2023 வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். பந்துவீச்சு பயிற்சியாளராக பிராஸ் மாம்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

டிராவிட் ஏற்கனவே இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.