இந்திய கிரிக்கெட்டிற்கு கடவுள் வழங்கிய பரிசுதான் எம்.எஸ். தோனி – முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன்

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். தோனி. இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவருக்கும் அணியின் நிர்வாகத்திற்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதனால் தோனி ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க விருப்பம் தெரிவித்தால், நிர்வாகம் எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலத்தில் எடுத்து விடும்.

கூல் கேப்டன் எனப் பெயரெடுத்துள்ள எம்.எஸ். டோனி உடல் கட்டுக்கோப்பு (fitness), பீல்டிங் ஆகிய இரண்டு விசயத்தில் கறாராக இருப்பார். கேட்ச் மிஸ் செய்தால், அல்லது பீல்டிங்கில் கோட்டை விட்டால் கடுங்கோபம் அடைவார்.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இருந்தவர் முகமது ஷேசாத். உடல் பருமனாக காணப்படும் ஷேசாத் சிக்ஸ் அடிப்பதில் வல்லவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவரால் விரைவாக ஓடி ரன்கள் எடுக்க முடியாது. இருந்தபோதிலும் தனது அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அளவில் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்.

2018-ம் இந்தியா- ஆப்காகிஸ்தான் இடையிலான சர்வதேச போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது எம்.எஸ். டோனியிடம் அப்போதைய ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் பேசியுள்ளார். அப்போது எம்.எஸ். தோனியிடம் பேசியது குறித்து சமீபத்தில் அஸ்கர் ஆப்கன் விவரித்திருந்தார்.

2018-ல் எம்.எஸ். தோனியிடம் பேசியது குறித்து அஸ்கர் ஆப்கன் கூறியதாவது:-

2018-ம் ஆண்டு இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை போட்டிக்குப்பிறகு நீண்ட நேரம் எம்.எஸ். தோனியிடம் பேசிக் கொண்டிருந்தேன். எம்.எஸ். டோனி சிறந்த கேப்டன். இந்திய கிரிக்கெட்டிற்கு கடவுள் வழங்கிய பரிசுதான் எம்.எஸ். தோனி. அவர் தலைசிறந்த மனிதர்.

முகமது ஷேசாத் குறித்து நாங்கள் அதிகமாக பேசிக் கொண்டோம். நான் எம்.எஸ். தோனியிடம் ஷேசாத் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் எனத் தெரிவித்தேன். தோனி என்னிடம் ஷேசாத் மிகப்பெரிய பானை வைத்திருக்கிறார். அவர் 20 கிலோ எடையை குறைத்தால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரை எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார். ஆனால், ஷேசாத் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு திரும்பும்போது, 5 கிலோ எடை அதிகரித்திருந்தார்.

இவ்வாறு அஸ்கர் ஆப்கன் தெரிவித்திருந்தார்.

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான “டை” ஆன போட்டியில் முதலில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இந்தியா 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நிலையில் 49.5 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இந்த போட்டியில் முகமது ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports