இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமனம்

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமனம் செய்ய அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த பதவிக்காக மொத்தம் 40 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் இருந்து இகோர் ஸ்டிமாக் (குரோஷியா), லீ மின் சுங் (தென்கொரியா), ஆல்பர்ட் ரோகா (ஸ்பெயின்), ஹகன் எரிக்சன் (சுவீடன்) ஆகிய 4 பேர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வானார்கள்.

புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை அகில இந்திய கால்பந்து சம்மேளன டெக்னிக்கல் கமிட்டி நேற்று நடத்தியது. இதில் இகோர் ஸ்டிமாக் நேரில் ஆஜராகி தனது திட்டத்தை விளக்கினார். மற்ற 3 பேரிடமும் ‘ஸ்கைப்’ மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது.

அகில இந்திய கால்பந்து சம்மேளன டெக்னிக்கல் கமிட்டியின் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு புதிய பயிற்சியாளர் பதவிக்கு இகோர் ஸ்டிமாக்கின் பெயரை செயற்குழுவுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிய பயிற்சியாளர் பெயர் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட இருக்கும் குரோஷியாவை சேர்ந்த 51 வயதான இகோர் ஸ்டிமாக் 1998-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த குரோஷியா அணியில் இடம் பெற்று இருந்தார். யூகோஸ்லாவியாவில் பிறந்த இகோர் ஸ்டிமாக் அந்த நாட்டின் 20 வயதுக்கு உட்பட்ட அணிக்காக 14 போட்டியில் விளையாடி இருக்கிறார்.

அதன் பிறகு குரோஷியாவுக்கு இடம் பெயர்ந்தார். குரோஷியா அணிக்காக 53 சர்வதேச போட்டிகளில் பின்கள வீரராக விளையாடி உள்ளார். அத்துடன் குரோஷியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்து இருக்கிறார்.

அடுத்த மாதம் (ஜூன்) தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் தனது பணியை தொடங்க இருக்கிறார். அவர் 3 ஆண்டு காலம் இந்த பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news