கேரள மாநிலம் கொல்லத்தில், மாதா அமிர்தானந்தமயி தேவியின் 66-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடந்தது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:-
நான் உள்துறை மந்திரியாக இருந்தபோது, காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தாக்குதல் நடந்தது. அதில் பலியான வீரர்களின் தியாகத்தை யாரும் மறக்க முடியாது.
வீரர்களின் தியாகத்தை நினைவில் கொள்ளாத எந்த நாடும் உலகத்தில் மதிக்கப்படாது. நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு பெற்றோர்கள் உள்ளனர் என்பதை நாம் மறக்கக்கூடாது. அவர்களுக்கு நாம் எப்போதும் துணை நிற்க வேண்டும். அந்த குடும்பம் செய்த தியாகத்தை மதிக்க வேண்டும்.
புல்வாமா தாக்குதல் நடந்த சில நாட்கள் கழித்து, பாகிஸ்தானில் பாலகோட் முகாமை நமது விமானப்படை தாக்கி அழித்தது. நாம் யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டோம். நமக்கு யாராவது தொந்தரவு அளித்தால், அவர்களை அமைதியாக இருக்க விட மாட்டோம்.
நமது அண்டை நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள், நமது கடலோர பகுதியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் வாய்ப்பை மறுக்க முடியாது. ஆனால், அதே சமயத்தில், நமது கடலோர பாதுகாப்பு மிக வலிமையாக இருக்கிறது என்பதை ராணுவ மந்திரி என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடலோர பாதுகாப்புக்கு நாம் முற்றிலும் உறுதி பூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.