Tamilவிளையாட்டு

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான போட்டி தொடர் வருகிற 27-ந் தேதி தொடங்கி ஜனவரி 19-ந் தேதி வரை நடக்கிறது. இரு அணிகள் இடையே 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் அரங்கேறுகின்றன. இதற்காக இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இன்று புறப்பட்டு ஆஸ்திரேலியா செல்கிறது. இந்த போட்டி தொடரில் உள்ளூர் மாநில அரசின் வழிகாட்டுதலுக்கு தகுந்தபடி ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டு களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு கிரிக்கெட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். கொரோனா மருத்துவ பாதுகாப்பு நடைமுறையின் படி முன்னதாக நடந்த அனைத்து போட்டி தொடர்களும் ரசிகர்கள் அனுமதியின்றி பூட்டிய ஸ்டேடியத்தில் தான் நடந்தது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் ஸ்டேடியத்தின் மொத்த இருக்கை வசதியில் 50 சதவீத ரசிகர்களையும், முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களையும், 2-வது டெஸ்ட் போட்டிக்கு 25 சதவீத ரசிகர்களையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு 75 சதவீத ரசிகர்களையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் போட்டிக்கு தினசரி சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். போட்டி நடைபெறும் சமயத்தில் நிலவும் சூழ்நிலைக்கு தகுந்தபடி ரசிகர்களின் அனுமதிக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.