X

இந்திய ஆடுகளில் எப்படி செயல்படுவது என்பது குறித்து பயிற்சி அளிக்க தயார் – முன்னாள் ஆஸ்திரேலிய வீர மேத்யூ ஹைடன்

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 3 நாட்களுக்குள் சுருண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தையும் ஏறத்தாழ இந்தியா உறுதி செய்துள்ளது.

முதல் 2 போட்டிகளும் முதல் 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எந்த நேரத்திலும் நான் உதவத் தயார். எப்போது என்னிடம் இதுபற்றி கேட்டாலும் சம்மதம் என்றுதான் கூறியுள்ளேன். சிறந்த அறிவுரை வேண்டும் என்றால் முன்னாள் வீரர்களை கிரிக்கெட் நிர்வாகம் தனிமைப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியையும், அறிவுரையையும் வழங்க நான் தயார். மேலும் இந்திய ஆடுகளங்களில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் நான் அவர்களுக்கு பயிற்சி தருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.