மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது. இதுபற்றி பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறும்போது, “ஏதோ துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடக்கப்போகிறது என எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு கெட்ட கனவு போல இப்படி ஒரு பேரழிவான நடவடிக்கையை எடுப்பார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்திய அரசியல்சாசன வரலாற்றில் இந்த நாள் ஒரு கருப்பு தினம்” என்றார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் கூறும்போது, “பா.ஜனதா ஓட்டுகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பில் அக்கட்சி விளையாடி இருக்கிறது” என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, “மத்திய அரசு செய்துள்ளது ஒரு பின்னடைவான காரியம். இது காஷ்மீர் மாநில மக்களை மேலும் தனிமைப்படுத்திவிடும். மக்களின் கவனத்தை திசைதிருப்பி, தேசியவாதம் என்ற பெயரில் நாட்டில் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரசு காஷ்மீர் மாநிலத்தை துண்டு, துண்டாக பிரிக்க நினைக்கிறது” என்றார்.
இது இந்திய அரசியல்சாசனத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜனதா ஆட்சியாளர்கள் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை சகித்துக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் காஷ்மீர் மாநிலத்தை ஆக்கிரமிப்பு பகுதியாக கருதுகிறார்கள். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் இணைந்து நாளை (புதன்கிழமை) நாடு தழுவிய போராட்டம் நடத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரெய்ன் கூறும்போது, “இன்று நடைபெற்றுள்ள இந்த அரசியல்சாசன ஒழுக்கக்கேடு மற்றும் கொடூரமான நடைமுறையை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது” என்றார்.
மேலும் தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் இந்த முடிவை எதிர்த்துள்ளன. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் இந்த முடிவை எதிர்த்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ராம்நாத் தாக்கூர் விவாதத்தின்போது, “மோடி அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.
அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சி, அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், சிவசேனா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகியவை வரவேற்றுள்ளன.