இந்திய அணி தேர்வில் வெளிநாட்டு நிபுணர்களின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை – சுனில் கவாஸ்கர் கண்டனம்

இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணி தொடர்பாக பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் இந்திய அணி குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிபுணர்களின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்று காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, அவர்கள் (வெளிநாட்டு நிபுணர்கள்) தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளை பார்த்தால் துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. இந்திய அணியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வீரர்களையா தேர்வு செய்கிறோம்? இது எப்படி அவர்களது கவலையாக இருக்கும். இந்திய வீரர்கள் யாராவது ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்கிறார்களா? அது எங்களது வேலை இல்லை.

கோலி, ரோகித் சர்மாவை விட பாபர் ஆசம் சிறந்தவர் என்று கூறுவார்கள். ஷாகின் ஷா அப்ரிடி சிறந்தவர், தெண்டுல்கரைவிட இன்சமாம்-உல்-ஹக் சிறந்தவர் என்று கூறினார்கள். அவர்களை பொறுத்தவரை எப்போதும் நம்மை விட அவர்கள் சிறந்தவர்கள் என்பதுதான் அவர்களது வழி. யார் 3-வது மற்றும் 4-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports