X

இந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது பெண்மணி! – ஆசி பெற்ற விராட் கோலி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்காள தேச அணிகள் மோதின. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. இறுதியில், முகமது ஷைபுதின் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனாலும், வங்காள தேசம் 50 ஓவரில் 286 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், உலகக்கோப்பை அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறியது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் இந்த போட்டியை காண வந்தனர்.

அப்போது சாருலதா படேல் எனும் 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியை கண்டு களித்து இந்திய அணி வீரர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். மைதானத்தில் இருந்த கேமராக்கள் மூதாட்டியின் பக்கமும் திரும்பியது.

அவர் வயதை மறந்து இந்திய அணியின் ஒவ்வொரு சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் கையில் வைத்திருந்த இசைக்கருவியைக் கொண்டு உற்சாகமாக இசை அமைத்துக் கொண்டிருந்தார்.

மேலும் அவர் இந்தியாவின் தேசிய கொடியினை ஆடைக்கு மேலே அணிந்திருந்தார். சாருலதா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, இந்திய வீரர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார்.

போட்டி முடிந்தவுடன், அவரை சந்தித்து இந்திய வீரர்களான விராட் கோலி, டோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் ஆசி பெற்றனர். விராட் கோலிக்கு வாழ்த்துக் கூறி, சாருலதா முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags: south news