தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் மூன்ற வடிவிலான இந்திய அணியிலும் அறிமுகம் ஆனார்.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்தது. இவர் அறிமுகமான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் அறிமுகமான அவர் 3 விக்கெட் சாய்த்தார்.
வெற்றி சந்தோசத்தில் சொந்த ஊர் திரும்பிய டி நடராஜன், இன்று சேலம் சின்னப்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ‘‘என்னுடைய பணியை செய்வதில் கவனம் செலுத்தினே். ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்னிடம் அறிமுகம் குறித்து கூறியபோது, நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தேன். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினே். விளையாடியதும், விக்கெட் வீழ்த்தியதும் கனவுபோல் இருந்தது.
இந்தியாவுக்காக விளையாடிய மகிழ்ச்சியை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது. அது ஒரு கனவு போன்றது. நான் பயிற்சியாளர்களிடம், வீரர்களிடம் இருந்து அதிகமான ஆதரவை பெற்றேன். அவர்கள் ஆதரவு தந்து என்னை உத்வேகப்படுத்தினர். அவர்கள் எனக்கு பின்னால் இருந்ததால், சிறப்பாக செயல்பட முடிந்தது.
விராட் கோலி, ரஹானே ஆகியோர் என்னை சிறப்பாக கையாண்டனர். என்னிடம் நேர்மையான விசயங்களை கூறினர். இருவருக்கும் கீழ் மகிழ்ச்சியாக விளையாடினேன்’’ என்றார்.