X

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனுக்கு சரியான ஆள் ரிஷப் பண்ட் – யுவ்ராஜ் சிங் கருத்து

இந்திய அணியின் 3 வடிவிலான அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு வயது 34. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு இளம் வீரரை கேப்டனாக தேர்வு செய்ய
வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

ரிஷப் பண்டை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இந்திய அணியை வழிநடத்துவதில் அவர்தான் சரியான வீரர் என நான் நினைக்கிறேன். அவரை முன்னாள் இந்திய அணியின் கேப்டன்
டோனியுடன் ஒப்பிடலாம்.

ரோகித் சர்மாவுக்கு வயதாகி வரும் நிலையில் இந்திய அணிக்கு இளம் வீரரை கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும். அவரது திறமையை நிருபிக்க அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். முதல் 6 மாதம்
அல்லது ஒரு வருடம் அவரிடம் இருந்து எந்தவித எதிர்ப்பார்ப்பும் வேண்டாம். நீங்கள் இளம் வீரர்களிடம் இருந்து நல்ல திறமையை நம்ப வேண்டும் என நான் நினைக்கிறேன்.

24 வயது என்பது தடை இல்லை. அவர் ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்று வரை அணியை கொண்டு சென்றிருக்கிறார். அந்த வயதில் எனக்கு
கேப்டன்ஷிப் பற்றி பெரிதாக தெரியவில்லை. விராட் கோலியும் அந்த வயதில் கேப்டனாக இருந்த போது நிறைய நுணுக்கங்களை தெரியாமல் இருந்தார். ஆனால் ரிஷப் பண்ட் சிறப்பாக கேப்டன்ஷிப்
செய்கிறார்.

இதைப்பற்றி அணி நிர்வாகம் எப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் டெஸ்ட் அணியை வழிநடத்த சரியான வீரர் என்று நான் நினைக்கிறேன்.

ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் 4 சதம் அடித்துள்ளார். மேலும் அவர் சிறந்த இடதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அவரை எதிர்கால ஜாம்பவானக பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.