இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்.எஸ். டோனியிடம் இருந்து மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியையும் பெற்றுக் கொண்டவர் விராட் கோலி.
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பேட்டிங் திறமையுடன் அணியையும் சிறப்பான வழி நடத்திச் சென்றார். ஆனால், ஐ.சி.சி. நடத்திய உலகத் தொடர்களில் இவரது தலைமையில் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
பாகிஸ்தானுக்கு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியடைந்தது. ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது.
ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த கேப்டனாக உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில இந்திய அணி இவரது தலைமையில் 95 போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டு போட்டிகளில் முடிவுகள் கிடைக்கவில்லை. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 27 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில் 65 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது.
ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தபோது, விராட் கோலி 21 சதங்கள் விளாசியுள்ளார். சராசரி 72 ஆகும்.