இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் நடிகையின் கருத்து – கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023க்கான போட்டி தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடரில் கடந்த அக்டோபர் 14 சனிக்கிழமை அன்று இந்திய பாகிஸ்தான அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய வெற்றியால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையே இன்று மகாராஷ்டிரா மாநில புனேயில் இத்தொடருக்கான போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என பலரும் கணிக்கின்றனர். இந்நிலையில், இப்போட்டி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகை செஹர் ஷின்வாரி (Sehar Shinwari) கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் அந்த நடிகை தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவிடம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவை இன்றைய போட்டியில் வங்காள தேச சகோதரர்கள் வென்று காட்ட வேண்டும். எங்களுக்காக அவர்கள் வெற்றி பெற்றால், நான் அந்நாட்டின் தலைநகர் டாகாவிற்கே சென்று, அந்த அணியை சேர்ந்த வீரர் ஒருவருடன் ‘டேட்டிங்’ செய்ய தயார்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கு இந்திய ரசிகர்களிடையே கிண்டலான விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானை வென்ற இந்தியா இதுவரை இத்தொடரில் ஆடிய 3 போட்டிகளில், மூன்றிலும் வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளது.

ஒரு இந்திய கிரிக்கெட் ஆர்வலர் நடிகை செஹர் முன்னர் பதிவிட்டிருந்த “அக்டோபர் 14 அன்று இந்தியா வென்றால் அந்நாட்டை குறித்து பேசுவதை நிறுத்தி கொள்வேன்” என குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்தி இனிமேல் இது போல் பேச வேண்டாம் என கூறியுள்ளார்.

அவர் கருத்திற்கு பல பயனர்கள் ஆதரவு கருத்துக்களை கூறி வருகின்றனர். இன்று நடைபெறவுள்ள போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports