இந்தியா, வங்காளதேச இடையிலான முதல் டி20 போட்டி – நாளை டெல்லியில் தொடங்குகிறது
வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கேப்டன் விராட்கோலிக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குணமடைந்ததால் ரோகித்சர்மா விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. தற்காலிக கேப்டன் ரோகித்சர்மா, தவான், மனிஷ் பாண்டே, ஷிரேயாஸ் அய்யர், குர்ணல் பாண்டியா, ரிஷப்பந்த், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
புதுமுக ஆல்ரவுண்டர் ஷிலும் துபே அணிக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் 20 ஓவர் தொடரை சமன் செய்து இருந்தது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.
வங்காளதேச அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான ஷகீப்-அல்-ஹசன் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பே. சூதாட்ட தரகர் அணுகியதை ஐ.சி.சி.யிடம் தெரிவிக்காததால் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகமதுல்லா தலைமையிலான அணியில் முஷ்பிகுர் ரகீம், முஷ்டாபிகர் ரகுமான், மொஸ்டக் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
வங்காளதேச அணி சமீபத்தில் சொந்த நாட்டில் நடந்த 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் இணைந்து சாம்பியன் பட்டம் பெற்றது.
டெல்லியில் கடுமையான காற்று மாசு இருப்பதால் அவசர நிலை பிறக்கப்பட்டு உள்ளது. போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.
காற்று மாசால் வீரர்களின் உடல் நிலைக்கு பாதிப்பு. காற்று மாசு காரணமாக டெல்லி போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி அங்கு தான் நடக்குமா? என்ற அச்சம் நிலவுகிறது.
வங்காளதேச அணியின் பயிற்சியாளர் காற்று மாசு பெரிய பிரச்சினை இல்லை என்று தெரிவித்துள்ளார். வங்காளதேச வீரர்கள் முகமூடி அணிந்து தான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ஷிரேயாஸ் அய்யர், ரிஷப்பந்த், மனீஷ் பாண்டே, குர்ணால் பாண்டியா, சஞ்சு சாம்சன், கலீல் அகமது, யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், ராகுல் சாகர், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.
வங்காளதேசம்: மகமதுல்லா (கேப்டன்), லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகமது நயீம், முஷ்பிகுர் ரகீம், அதீப் உசேன், மொஸ்டக் உசேன், அமினுல் இஸ்லாம், அரபாத் சன்னி, அல்-அமின் உசேன், முஷ்டாபிசுர் ரகுமான், ஷீசைபுல் இஸ்லாம், முகமது மிதுன், தஜில இஸ்லாம், அபு ஹைதா.