இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 5-ம் ஆண்டு கொண்டாட்டமான இன்று, ‘இதய ஆரோக்கியத்துக்காக யோகா’ என்ற கருத்தை மையமாக கொண்டு யோகா கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு யோகா முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். யோகா செய்வதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் அவர் பேசினார்.
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு யோகா செய்தனர்.
டெல்லி தீனதயாள் உபாத்யாய் பார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய பொதுச்செயலாளர் ராம் லால் ஆகியோர் பங்கேற்றனர். டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றனர். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பங்கேற்றார்.
ரோத்தக்கில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் உள்துறைமந்திரி அமித் ஷா, அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பங்கேற்று, மக்களோடு மக்களாக அமர்ந்து யோகா செய்தார்.
மும்பையில் உள்ள இந்தியா கேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் நடிகை ஷில்பா ஷெட்டியும் கலந்துகொண்டு யோகாசனம் செய்தார்.
இதேபோல் சென்னை மெரினா கடற்கரையில் இந்திய கடற்படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் யோகாசனங்களை செய்து அசத்தினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படையினர் யோகா செய்தனர். இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை வீரர்கள், ரோதங் பாஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.
இந்தியா-மியான்மர் எல்லையில் நடந்த நிகழ்ச்சியில் அசாம் ரைபிள்ஸ், சிஆர்பிஎப், போலீஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று யோகா செய்தனர்.
ஜம்முவில் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை வீரர்கள் யோகாசனங்கள் செய்தனர். ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் தங்கள் முகாம்களில் யோகா செய்தனர். இமயமலைப் பகுதியில் உள்ள பல்வேறு ராணுவ முகாம்களில் யோகா முகாம்கள் நடைபெற்றன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி, டெல்லியில் உள்ள அலுவலக வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஐஎன்எஸ் சிந்துத்வாஜ் நீர்மூழ்கி கப்பலில் கடற்படை வீரர்கள் யோகா செய்தனர். கப்பலின் மேற்பகுதியில் நின்ற நிலையில், படுத்த நிலையில் அவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தது அனைவரையும் கவர்ந்தது.
இதேபோல் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களிலும், வெளிநாடுகளிலும் யோகாசனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.