திறந்த வேனில் நின்றவாறு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர் மணப்பாறை. மணப்பாறை முறுக்கிற்கு கடந்த மார்ச் மாதம் புவிசார் குறியீடு வழங்கியவர் பிரதமர் மோடி. இங்கு குழுமியிருக்கும் மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான். பிரதமர் மோடி ஆட்சி 3-வது முறையாக தொடர வேண்டும், இங்கு 30 மாத காலம் ஆட்சி செய்யும் தி.மு.க.வின் ஆட்சி அகல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரு சுத்தமான அரசியல் இருக்க வேண்டும். குடும்ப அரசியல் இருக்கக்கூடாது. சாமானியனுக்காக இந்த அரசியல் நடத்தப்பட வேண்டும்.
இந்தியா – பாரதம் என்று சொன்னால் ஒரு தனி மரியாதை இருப்பதை இப்போது பார்க்க முடிகிறது. 2011-ம் ஆண்டில் காங்கிரசும், கூட்டணியில் இருந்த தி.மு.க.வும் ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டை காட்டு மிராண்டி விளையாட்டு என்று சொன்னார்கள். ஆனால் மீண்டும் இப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு காரணம் நரேந்திரமோடி மட்டும்தான். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட சில வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, இனி வராது என்றால் அதை உருவாக்கி கொடுத்தவர் பிரதமர் மோடி.
ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகள் வளர்ச்சியை கொடுக்கவில்லை. இதுபற்றி மக்கள் கேட்க ஆரம்பித்தால் மத்திய அரசு இந்தியை திணிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். மோடி இந்தியை திணிக்கிறாரா?. ஐ.நா. சபையில் தமிழில் மோடி பேசுகிறார். திருக்குறளை 100 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார். எங்கு சென்றாலும் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றி பேசுகிறார். செம்மொழி ஆய்வு நிறுவனம் உருவாக்குகிறார். காசி தமிழ்ச்சங்கம் உருவாக்கி உள்ளார். நம் பாரம்பரிய சின்னமான செங்கோலை பாராளுமன்றத்தின் மையக்கட்டிடத்தில் வைக்கிறார். சவுராஷ்டிரா தமிழ் சங்கம் வைக்கிறார்.
இந்தியாவின் எந்த மொழிக்கும், எந்த கலாசாரத்திற்கும் கொடுக்கப்படாத மரியாதையை கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழக கலாசாரத்திற்கும் கொடுத்துள்ளார். எனவே மோடி மீது தி.மு.க. குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால் தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைய்யுங்கள். இந்தியை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். இந்திய மக்களை வறுமைக்கோட்டில் வைத்திருந்தது தான் காங்கிரஸ் ஆட்சி.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு விட்டது. அந்த தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் தீபாவளிக்கு முன் ஊதியம் வந்து விடும். இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் அவர்களை வளப்படுத்திக் கொள்வார்கள், அவ்வளவுதான். அவர்களால் எந்த நல்லதும் நடக்காது.
தி.மு.க.வில் உள்ளவர்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள். அரசியலுக்கு வருவதற்கு முன் அவர்களின் சொத்து என்ன? அமைச்சர், எம்.எல்.ஏ. ஆன பின் இப்போது அவர்களின் சொத்து விவரம் என்ன என்பதை கேட்டுப்பாருங்கள். இந்தியாவில் 92 முறை ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி காலத்தில் ஒருமுறையாவது எங்காவது ஆட்சி கலைப்பு நடந்தது உண்டா?. தமிழகத்தில் காவல்துறையை வைத்து சர்வாதிகார ஆட்சியை தி.மு.க. அரசு நடத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.