இந்தியா – பாகிஸ்தான் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி – அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் முழுவதும் நிரம்பியது

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 14-ந்தேதி நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா அல்லாத போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் அன்று விற்பனையாகிறது.

இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் மோதும் போட்டிக்களுக்கான டிக்கெட்டுகள் (சென்னை, டெல்லி, புனே) வருகிற 31-ந்தேதி விற்பனையாகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ந்தேதி விற்பனையாகிறது.

ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனையாகிறது. டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்துக் கொண்டால் அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலில் தெரிவிக்கப்படும். அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க இது கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.

3 முதல் 5 நட்சத்திர ஓட்டல்களுக்கான முன்பதிவு புக்கிங் முற்றிலும் முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் சுமார் 180 அறைகள் உள்ளன. அவை கிட்டத்தட்ட முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்களில் ஒருநாள் வாடகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2½ லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்ட ஓட்டல் அறையின் ஒருநாள் கட்டணம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2½ லட்சமாக இருக்கிறது.

இதேபோல அகமதாபாத் செல்வதற்கான விமான கட்டணமும் கடுமையாக உயர்ந்து உள்ளது. அக்டோபர் 13 முதல் 15 வரை மும்பை, டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் பெரும்பாலான விமானங்களின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண நாட்களில் ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரை தான் கட்டணமாகும். உலக கோப்பை போட்டி காரணமாக 5 மடங்கு அதிகரித்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் அமரலாம். இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரசிகர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குஜராத் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports