இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு – அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது-

நாங்கள் நீண்ட நாட்களாகவே கூறி வருவது, தீவிரமான பிரச்சனைகளில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆதரவு என்பதுதான். எங்களுடைய நீண்ட கால நிலை இதுதான். இவ்வாறு மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமல்ல. இந்தியாவுடன் போரை நடத்த விரும்பவில்லை. அனைத்து தீவிரமான மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.

அர்த்தமுள்ள விவாதங்கள் மூலம் நமது தீவிரமான பிரச்சனைகள் புரிந்த கொள்ளப்படாவிட்டால் அண்டை நாடுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அண்டை நாடுகளும் புரிந்து கொள்வது முக்கியம். பாகிஸ்தானின் அணு சக்தி, தற்காப்பு நோக்கத்திற்காகவே உள்ளது. அது ஆக்கிரமிப்புக்காக அல்ல. ஏனென்றால் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் என்ன நடந்தது என்பதை சொல்ல யார் வாழ்வார்கள்? எனவே போர் ஒரு விருப்ப மல்ல.

கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்று போர்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். பரஸ்பர மரியாதை, நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் சிறந்த உறவுகளை வைத்திருக்க விரும்புகிறோம்.

நாங்கள் ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுவதுமாக கை விடும்வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news