இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி – இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், லக்னோவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியும் வென்றது. இதன்மூலம் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டி20 போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேவேளையில் மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இன்று நடைபெறும் போட்டியில் சுப்மன் கில்லா? பிரித்வி ஷாவா? என்பதை பாண்ட்யா தான் முடிவு செய்ய வேண்டும். ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, டி20 தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools