நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 டி20 தொடரின் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.
டி20 போட்டியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் ஜொலிக்கிறார். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்தால் கட்டுப்படுத்துவது கடினம். ஷுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். உள்ளூர் போட்டியில் அசத்திய பிரித்விஷாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. பந்து வீச்சில் அர்தீப்சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.
நியூசிலாந்து டி20 அணிக்கு சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரை மோசமாக இழந்த நியூசிலாந்து அணி அதற்கு டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ராஞ்சியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார். இன்றைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.