இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3 வது ஒருநாள் போட்டி – இன்று இந்தூரில் நடக்கிறது

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா,நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.

சொந்த மண்ணில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும், பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் போட்டியில் மட்டும் தாக்குப்பிடித்து ஆடியது. 2-வது ஆட்டத்தில் 108 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. அந்த அணி இன்றைய போட்டியில் வென்று ஆறுதல் பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 116-வது போட்டியாகும். இதுவரை நடந்த 115 ஆட்டத்தில் இந்தியா 57-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றன. 7 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி ‘டை’ ஆனது. இன்றைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools