Tamilவிளையாட்டு

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி அங்கிருந்து நேரடியாக ஜெய்ப்பூர் வந்துள்ளது. இதேபோல் உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணி ஜெய்ப்பூர் சென்று பயிற்சியில் ஈடுபட்டது.

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி விலகினார். இதனை அடுத்து 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியியின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய அணியில் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நேர்த்தியாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி லீக் சுற்று ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களம் இறங்கும். ஆனால் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி நேரத்தில் 20 ஓவர் தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும். அவர் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்கு வசதியாக ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வரும் பெர்குசன் ஆடுவது சந்தேகம் தான்.

நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளைன் பிலிப்ஸ் ஆகியோரும், பந்து வீச்சில் டிம் சவுதி, கைல் ஜாமிசன், சோதி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

உலக கோப்பையில் வெளிப்படுத்திய உத்வேகத்தை தொடர நியூசிலாந்து அணி முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் உலக கோப்பையில் தங்களது அரையிறுதி வாய்ப்புக்கு ஆப்பு வைத்த நியூசிலாந்து அணிக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 6 முறையும், நியூசிலாந்து அணி 9 தடவையும் வென்று இருக்கிறது. ‘டை’யில் முடிந்த 2 ஆட்டங்களில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றியை ருசித்ததும் இதில் அடங்கும்.

இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜெய்ப்பூரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிகிறது.

இன்றைய போட்டிக்கான இரு அணியின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், வெங்கடேஷ் அய்யர் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கிளைன் பிலிப்ஸ், மார்க் சாப்மன், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், டிம் சவுதி (கேப்டன்), ஆடம் மில்னே அல்லது பெர்குசன், சோதி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.