இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் இன்று நடக்கிறது.
லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
ஒயிட் பால் போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர் போட்டி) ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாததால் கே.எல்.ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி எல்லாவகையிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
டெஸ்ட் தொடரை வென்றதுபோல் ஒருநாள் தொடரையும் வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 85-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 84 ஆட்டத்தில் இந்தியா 35-ல், தென் ஆப்பிரிக்கா 46 -ல் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை.
இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.