Tamilவிளையாட்டு

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டெஸ்ட் – ராணுவ வீரர்களுக்கு இலவச டிக்கெட்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டிலும் புனேயில் நடந்த 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (19-ந் தேதி) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கிறது.

ராஞ்சியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டி டிராவில் முடிந்தது.

தற்போது இம்மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் என்.சி.சி.யை சேர்ந்தவர்கள் என 5 ஆயிரம் பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் கூறும்போது, ‘பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டியை காண இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.

ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் என்.சி.சி. படையினர் என 5 ஆயிரம் பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்’ என்றார்.

ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓட்டலில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தங்கி இருக்கிறார்கள். இதைப்போல் மைதானத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓட்டலில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் இருந்து அதிக தொலைவில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டது குறித்து ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் கூறும்போது, ஓட்டல்களில் அறைகள் ஓராண்டுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது.

ஓட்டல் அறைகளை நாங்கள் புக் செய்யவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியமே அறைகளை புக்செய்தது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *