இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. லக்னோ, பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்தது. ஆனால் இந்தூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் தொடக்க ஆட்டத்தில் 106 ரன்னில் அடங்கி தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்கா அணி 2-வது ஆட்டத்தில் எழுச்சி பெற்றதுடன், இலக்கை விரட்டுகையில் 221 ரன்கள் குவித்து மிரட்டியது.

கடைசி ஆட்டத்தில் 227 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்கா 18.3 ஓவர்களில் 178 ரன்னில் இந்தியாவை ஆல்-அவுட் செய்து அசத்தியது. 2-வது ஆட்டத்தில் டேவிட் மில்லரும், கடைசி ஆட்டத்தில் ரிலீ ரோசவ்வும் சதம் அடித்து அசத்தினர். கடைசி 2 ஆட்டங்களிலும் குயின்டாக் டி காக் அரைசதம் விளாசினார். கடைசி ஆட்டத்தில் அந்த அணியின் பந்து வீச்சாளர்களும் கலக்கினர். தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் குயின்டான் டி காக், டேவிட் மில்லர், கேப்டன் பவுமா, ரோசவ், ரீஜா ஹென்ரிக்ஸ் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். பவுமா தொடர்ந்து சொதப்பி வருகிறார். பந்து வீச்சில் இங்கிடி, அன்ரிச் நோர்டியா, வெய்ன் பார்னெல், ரபடா, பிரிட்டோரியஸ் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.

கடந்த 20 ஓவர் போட்டியில் வெற்றி கண்டதால் தென்ஆப்பிரிக்க அணி கூடுதல் நம்பிக்கையுடன் கால் பதிக்கும். அதேநேரத்தில் உலக கோப்பை சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் பின்தங்கி இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 16-ந் தேதி தொடங்குவதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்கிறது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி களம் இறங்குகிறது.

இந்திய அணியில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மாற்று வீரர்களாக இடம் பிடித்துள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோரும் அங்கம் வகிக்கிறார்கள். அறிமுக வீரர்களாக ராகுல் திரிபாதி, ரஜத் படிதார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பேட்டிங்கில் ஷிகர் தவான், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷனும் வலுசேர்க்கிறார்கள். வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், அவேஷ் கான், முகமது சிராஜூம், சுழற்பந்து வீச்சில் ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவும் சிறந்த நிலையில் உள்ளனர்.

இந்திய ஒருநாள் போட்டி அணியில் தங்களது இடத்தை தக்கவைக்க வீரர்கள் முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம். இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools