இந்தியா செய்யும் உதவி நன்கொடை அல்ல – இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி செய்யவும் போதிய பணம் இன்றி இலங்கை தவித்து வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இதன்படி, உணவுபொருட்கள், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை இலங்கை இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை மூலம் இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் நாம் 31 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாகப் பெற்றுள்ளோம். மேலும் கடனுதவி அளிக்க வேண்டும் என்று இந்திய தலைவர்களிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இந்தியாவாலும் இந்த முறையில் தொடர்ந்து உதவி அளிக்க முடியாது. அவர்கள் அளிக்கும் உதவிக்கு சில வரைமுறைகள் உள்ளன. மறுபுறம் இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை. நமது பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நமக்கு முன்னால் இருக்கும் மிகத்தீவிரமான பிரச்சினை இதுதான். இலங்கை பொருளாதாரம் மீட்சி அடைவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதற்காக அன்னிய செலாவணி நெருக்கடியை நாம் முதலில் தீர்க்க வேண்டும்.
என தெரிவித்தார்.