இந்தியா கூட்டணி பேரணிக்கு திரண்ட கூட்டம் பா.ஜ.கவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது – முதலமைச்சர் பினராயி விஜயன்
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இன்று வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இவரது கைது கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப் பிரமாண்ட பேரணி கூட்டம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோரின் மனைவிகளும் இந்த பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏராளமான மக்கள் இந்த பேரணிக்கு திரண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி பேரணிக்கு திரண்ட கூட்டம், பா.ஜனதாவுக்கு கடுமையான எச்சரிக்கையை கொடுத்துள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், “பா.ஜனதாவுக்கு எதிரான 18 கட்சிகள் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. இந்த பேரணியில இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். டெல்லி மாநில மதுபான கொள்கையில் காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைதான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணைக்கு வழிவகுத்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் புகார் அளித்தது. இருந்தபோதிலும் பேரணியில் கலந்த கொண்டதற்காக காங்கிரஸ் கட்சியை வரவேற்கிறேன்” என்றார்.
இந்த பேரணியின்போது எதிர்க்கட்சிகள், ஜனநாயகத்தை, அரசியலமைப்பை காப்பாற்ற பா.ஜனதாவை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசின் சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் சமநிலை பறிக்கப்படுகிறது என பா.ஜனதா மீது குற்றம் சாட்டினர்.