இந்தியா – கனடா இடையிலான விமான போக்குவரத்து அதிகரிக்க ஒப்பந்தம் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல்
கொரோனா தொற்று காலத்தில் இந்தியா-கனடா இடையேயான விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில், கனடாவில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த இந்திய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு தரப்பு தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
விசா மற்றும் பரஸ்பர சட்ட உதவி ஒத்துழைப்பை மேம்படுத்துவது, இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்து குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாலி நகரில் நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
இந்தியா-கனடா இடையே ஒரு ஒப்பந்தம் ஒன்றை அறிவிப்பதாகவும், அது எங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் அதிக அளவில் விமானங்களை இயக்க உதவும் என்றும் அப்போது அவர் கூறினார். இரு நாடுகளுக்கு இடையே சரக்கு போக்குவரத்து மற்றும் மக்களின் பயணத்தை வேகமாகவும் எளிதாகவும் மாற்றவும், பரஸ்பரம் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தோ-பசிபிக் பகுதியில் கனடா தனது நீண்ட கால ஈடுபாட்டை வலுப்படுத்துவதுடன் பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.