X

இந்தியா கண்டித்தும் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்கா

டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஒருவாரம் அனுமதி அளித்தது.

ஒருவாரம் விசாரணைக்குப் பிறகு இன்று அவர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையே அமெரிக்கா அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தது. “கெஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும்” என அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இதனால் இந்தியா அதிருப்தி அடைந்தது. அதன்படி டெல்லியில் உள்ள பொறுப்பு துணை தூதர் குளோரியா பெர்பெனாவை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கண்டனத்தை தெரிவித்தது.

இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது தொடர்பாக கூறுகையில் “தனிப்பட்ட தூதர உரையாடல்கள் பற்றி பேசவில்லை. நாங்கள் நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பது ஆகியவற்றை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதை யாரும் எதிர்க்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களுடைய நடவடிக்கை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கி வைத்திருப்பதாகவும், இதனால் தேர்தலை சந்திக்க மிகவும் சவாலாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருவதை நாங்கள் அறிவோம்” என்றார்.

ஏற்கனவே அதிருப்தியில் உள்ள இந்தியா, மேலும் அமெரிக்கா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.