இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் – அஸ்வின் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் கிரிக்கெட் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். தற்போது அவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அந்த அறக்கட்டளை சார்பில் இளம் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஆர்.அஸ்வின் கலந்து கொண்டு பேசுகையில், ‘கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிக செலவு பிடிக்கும். அந்த சிரமத்தை நானும் சந்தித்து இருக்கிறேன். கிரிக்கெட் தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறது. அதற்கு பிரதிபலன் செய்ய விரும்பியதால் இந்த அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன். ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி செய்வேன்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நினைத்தது போல் இந்திய அணி நல்ல ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன். ஷிகர் தவான் காயம் அடைந்து இருப்பது பெரிய விஷயம் இல்லை. அந்த இடத்தை நிரப்ப லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 2003, 2007-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி இருந்தது போல் தற்போதைய இந்திய அணி வலுவாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news