மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடக்க இருந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை கொட்டி தீர்த்தது.
பிட்ச்சை பாதுகாக்க மூடப்பட்டு இருந்த தார்ப்பாயில் இருந்த ஓட்டை வழியாக தண்ணீர் இறங்கியதால் ஆடுகளம் ஈரப்பதமானது. மழை விட்ட பிறகு ஆடுகளத்தை உலர வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கார் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்துக்கான அணியில் இடம் பிடித்த வீரர்கள் இன்றைய ஆட்டத்திலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டு களம் காணும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
மலிங்கா தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணியும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. இந்த ஆண்டு கடைசியில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தங்களை சிறப்பாக தயார்படுத்தி கொள்வதில் முனைப்பு காட்டும் இந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் ஏற்கனவே ஒரே ஒரு 20 ஓவர் போட்டி அரங்கேறி இருக்கிறது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது. இவ்விரு அணிகளும் இன்று மோதுவது 18-வது முறையாகும். இதுவரை நடந்த 17 போட்டிகளில் இந்திய அணி 11 முறையும், இலங்கை அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி.
இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, குணதிலகா, குசல் பெரேரா, ஒஷாடா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா, இசுரு உதனா, வானிந்து ஹசரங்கா, லாஹிரு குமாரா, மலிங்கா (கேப்டன்).