Tamilவிளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மழை புகுந்து கெடுத்து விட்டது. அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புரட்டி எடுத்ததோடு தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முந்தைய டெஸ்டில் 9-வது விக்கெட்டுக்கு பும்ராவும் முகமது ஷமியும் இணைந்து 89 ரன்கள் திரட்டியதும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அத்துடன் 272 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து ஆடியபோது அதே வேகத்துடன் வரிந்து கட்டி நின்ற இந்திய பவுலர்கள் அவர்களை 120 ரன்னில் சுருட்டி அமர்க்களப்படுத்தினர்.

இந்தியாவுக்கு மிடில்வரிசை பேட்டிங் தான் கவலைப்படும் வகையில் உள்ளது. கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார். நீண்ட கால சத ஏக்கத்தை இந்த டெஸ்டின் மூலம் கோலி முடிவுக்கு கொண்டு வருவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். புஜாரா, துணை கேப்டன் அஜிங்யா ரஹானே ஆகியோரின் மந்தமான பேட்டிங்கும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. அவர்களும் சூழ்நிலைக்கு தகுந்தபடி பேட்டிங்கில் கொஞ்சம் துரிதம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் வலுவான அடித்தளம் அமைத்து தந்ததே தொடரில் இந்தியா முன்னிலை பெற்றதற்கு முக்கிய காரணம். ரோகித் சர்மாவை பொறுத்தவரை பவுன்சராக வரும் பந்துகளை ‘புல்ஷாட்’டாக விரட்டும் போது கூடுதல் கவனம் தேவையாகும். இந்த வகையில் அவர் இரண்டு முறை விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார்.

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே லீட்சில் நிலவும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், இந்தியா 4 வேகம், ஒரு சுழல் என்ற யுக்தியில் மாற்றம் செய்யாது என தெரிகிறது.

லார்ட்ஸ் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஆக்ரோஷமான பவுலிங் (8 விக்கெட்) இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தது. இன்றைய டெஸ்டிலும் அவரது ஜாலம் தொடர்ந்தால் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை 22 டெஸ்டில் விளையாடி 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, இந்த டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றினால் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.

கடந்த டெஸ்டில் தோற்றதால் இங்கிலாந்து கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் மட்டும் சூப்பர் பார்மில் (2 சதம் உள்பட 386 ரன்) உள்ளார். மற்றவர்களின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை. தடுமாறி வரும் தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி கழற்றி விடப்பட்டு விட்டார். அவருக்கு பதிலாக டேவிட் மலான் களம் இறங்குகிறார்.

இதேபோல், காயத்தால் விலகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக சகிப் மமூத் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 2-வது டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பரிகாரம் தேடும் வேட்கையுடன் இங்கிலாந்து இருப்பதால் இந்த டெஸ்டிலும் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இந்திய அணி இதுவரை 6 டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. இங்கு கடைசி இரு டெஸ்டுகளில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது (1986 மற்றும் 2002-ம் ஆண்டு) கூடுதல் நம்பிக்கையை தருகிறது. 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 628 ரன்கள் குவித்தது சிறப்பம்சமாகும்.

இங்கிலாந்து அணி இங்கு கடைசியாக விளையாடிய 10 டெஸ்டுகளில் 4-ல் வெற்றி, 5-ல் தோல்வி, ஒன்றில் டிரா கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா அல்லது அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சகிப் மமூத் அல்லது கிரேக் ஓவர்டான்.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3, டென் 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.