X

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி – நாளை சென்னையில் தொடங்குகிறது

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடுகிறது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது.

இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதுவும் முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவிய பிறகு தொடரை கைப்பற்றியது மிகவும் பாராட்டுக்குரியது.

இதனால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ளும். அதே நேரத்தில் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்டிலும் வீழ்த்தி இருந்தது. இதனால் மிகவும் கவனமுடன் ஆடவேண்டும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

11 வீரர்களை தேர்வு செய்வது கேப்டனுக்கு சவாலான பணியாகும். ஆஸ்திரேலிய பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு விராட்கோலி நாடு திரும்பினார். எஞ்சிய 3 டெஸ்டில் ஆடவில்லை. அவர் தற்போது அணியில் இணைந்து இருக்கிறார். இதேபோல காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் விலகிய இஷாந்த் சர்மாவும் அணியோடு இருக்கிறார்.

6 பேட்ஸ்மேன்கள், 5 பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கலாம். பந்து வீச்சாளர்களில் பும்ரா, அஸ்வின், இஷாந்த் சர்மா இடம் பெறுவது உறுதி. மற்ற 2 இடத்திற்கு முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

ஆடுகள தன்மையை பொறுத்து 3 வேகப்பந்து வீரர்களா? 3 சுழற்பந்து வீரர்களா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதற்கு ஏற்ற உடல் தகுதியுடன் இல்லை. இதனால் ஆல்ரவுண்டரான அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

ஆஸ்திரேலியாவில் ஆடியது போல ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். புஜாரா, விராட் கோலி, ரகானே, ரி‌ஷப் பண்ட் ஆகியோர் அதற்கு அடுத்த வரிசையில் ஆடுவார்கள்.இந்தியா வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டது. சொந்த மண்ணில் விளையாடுவதால் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள்.

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுத்து விளையாடும்.

கேப்டன் ஜோரூட் பேட்டிங்கில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். அவர் இலங்கை தொடரில் இரட்டை சதமும், சதமும் அடித்தார். அவர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம்.

இது தவிர பென் ஸ்டோக்ஸ், பட்லர், டாம் சிப்லி, மொய்ன்அலி, பர்ன்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

பந்துவீச்சில் ஆண்டர்சன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார். அவர் 606 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீரர் ஆவார்.

இது தவிர ஸ்டூவர்ட் பிராட் (517 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள்.

நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.