Tamilவிளையாட்டு

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டி – இன்று நாக்பூரில் நடக்கிறது

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும்.

எனவே முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மொகாலியில் 208 ரன் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. பந்து வீச்சாளர்கள் சொதப்பியதால் மிகப்பெரிய ரன்களை எடுத்தும் பலன் இல்லாமல் போனது.

இன்றைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் பந்து வீச்சில் மாற்றம் செய்யப்படும். கடந்த ஆட்டத்தில் வேகப்பந்தில் உமேஷ் யாதவும், சுழற்பந்தில் அக்‌ஷர் படேலும் சிறப்பாக செயல்பட்டனர். புவனேஷ்குமார், ஹர்சல் படேல், யுசுவேந்திர சாஹல் ஆகியோர் ரன்களை அள்ளிக் கொடுத்து மோசமாக வீசினார்கள். தீபக் சாஹர், அஸ்வின் ஆகியோர் வாய்ப்பு நிலைக்காக காத்திருக்கிறார்கள்.

அணியின் முதுகெலும்பான பும்ரா முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டுகிறது. ஹர்திக் பாண்ட்யா, சூர்ய குமார் யாதவ், லோகேஷ் ராகுல் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மேலும் டி.ஆர்.எஸ். விஷயத்தில் அவரது செயல்பாடு அதிருப்தியை அளித்தது. கேப்டன் ரோகித்சர்மா அவருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பாரா? என்று உறுதியாக தெரியவில்லை. தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டால் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்புவார்.
ஆஸ்திரேலிய அணி 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. மொகாலியில் கேமரூன் கிரீன், மேத்யூ வேட் ஆகியோர் இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளி அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்டீவ் சுமித், கம்மின்ஸ், கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இன்றைய போட்டியிலும் அந்த அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.