Tamilவிளையாட்டு

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பகல்-இரவு போட்டியாக நடத்த முடிவு?

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஒரு நாள் போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. பிரிஸ்பேனில் நவம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் மூன்று ஒரு நாள் போட்டிகளையும், அடிலெய்டில் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் மூன்று 20 ஓவர் போட்டிகளையும் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து போட்டி) டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மெல்போர்ன் (டிச.26-30), சிட்னி (ஜன.7-11), பிரிஸ்பேன் (ஜன.15-19) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கிறது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதால் முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் நடப்பது உள்ளூர் மாகாண அரசாங்கத்தின் ஒப்புதலை பொறுத்து இறுதி செய்யப்படும். நவம்பர் 10-ந்தேதி ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இந்திய அணி அடுத்த வாரத்துக்குள் தேர்வு செய்யப்படும்.