இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.
மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் நேற்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன. டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை ஒழுங்குபடுத்தினர். இதில் சில ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.