Tamilசெய்திகள்

இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:

இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத் தீங்கு விளைவிக்க முயன்றால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். நமது வீரர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

2016-ல் சர்ஜிகல் தாக்குதல், 2019 பாலகோட் வான் வழித் தாக்குதல் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது வீரர்கள் காட்டிய வீரம் ஆகியவை நமது வலிமை மற்றும் தயார் நிலைக்கு சான்றாகும். தேச நலன்களைப் பாதுகாப்பதே மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

எதிர்கால சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ராணுவம் அதிநவீன ஆயுதங்களுடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடனும் தயாராக இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக அண்மையில் பிரதமரால் வெளியிடப்பட்ட லோகோவில் தாமரை மலர் இருப்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும். இந்தியாவின் தேசிய மலர் தாமரை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.