இந்தியாவை ஒரே கோணத்தில் பார்க்க இயலாது – ராகுல் காந்தி
கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி, இந்தியாவில் காங்கிரஸின் எண்ணங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என கூறினார். இதற்கான பதிலாக காங்கிரஸ், மோடியிடம் என்ன கூறுகிறது என்றால், நாங்கள் உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை. உங்கள் தவறை சுட்டிக்காட்ட நிச்சயம் போராடுவோம். தேர்தலில் உங்களை தோற்கடிப்போம். ஆனால் உங்களுக்கு எதிராக எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட்டோம்.
நான் வட இந்தியாவின் அமேதி தொகுதியில் போட்டியிடுவது தான் வழக்கம். ஆனால் இம்முறை, கேரளாவில் இருந்து போராடுவேன் என தென் இந்திய மக்களுக்கு கூறவே போட்டியிடுகிறேன். மேலும் இந்தியாவை ஒரே கோணத்தில் பார்க்க இயலாது. இந்தியா ஒரே சிந்தனையை கொண்டு செயல்படவில்லை. இந்தியா பல்வேறு கோணங்களில், பலதரபட்ட பார்வைகளை கொண்டுள்ளது. இவை அனைத்தும் முக்கியமானவை ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.