இந்தியாவுக்கு விரைவில் பெரிய அளவில் எதோ ஒன்று காத்திருப்பதாகப் அமரிக்காவில் இயங்கி வரும் பிரபல நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலைதனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் Something big soon India என்று ஒற்றை வரியில் ஹிண்டன்பெர்க் நிறுவனம் பதிவிட்டுள்ளது அனைவரிடையேயும் பேசுபொருளாகியுள்ளது.
முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பெரு நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளைக் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் ஹிண்டன்பெர்ஜ் ஆய்வு நிறுவனம் , இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமமானது தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பங்கு முறைகேடு மற்றும் கணக்கியல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.
பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்திக் காண்பித்து அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் அதானி குழுமம் ஈடுபட்டதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையானது இந்திய அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மாபெரும் சரிவை சந்தித்தன. தங்களின் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் குற்றம்சாட்டியது. ஆனால் தங்கள் அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் வழக்குகூட தொடரலாம் என்று ஹிண்டன்பெர்க் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது. இந்தநிலையில்தான் தற்போதைய இந்த பதிவு அதானி குழுமம் பற்றியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.