Tamilசெய்திகள்

இந்தியாவுக்கு தீங்கு விளைவித்தால் யாரையும் விட மாட்டோம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கு தீங்கு விளைவித்தால் யாரையும் விட மாட்டோம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராஜ்நாத் சிங் அங்குள்ள இந்திய அமெரிக்க சமூகத்தினரிடம் சான் பிரான்சிஸ்கோவில் உரையாற்றினார். அப்போது பேசிய
அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது.

சீனா லடாக் எல்லையில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்களும், பல சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தியா சீனாவுடன் இந்த பிரச்சனை குறித்து 15 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளது.

இந்த பிரச்சனையில் நாங்கள் என்ன முடிவெடுத்தோம் என்பதையும், இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் சீனாவுக்கு ஒரு தகவல் சென்று சேர்ந்தது. எங்கள் மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் விட மாட்டோம்.

இந்தியா ஒரு நாட்டுடன் நல்லுறவு வைத்திருக்கிறது என்பதற்காக மற்ற நாடுகளுடன் மோசமான உறவை மேற்கொள்ளாது. அனைவரையும் சமமாக நடத்துவது தான் இந்தியாவின் கொள்கை. ஒருவரை கைவிட்டு மற்றொருவருக்கு ஆதரவு தருவது எங்கள் கொள்கை கிடையாது.

உலக அளவில் இந்தியாவின் பிம்பம் மாறியுள்ளது. இந்தியாவின் கெளரவம் உயர்ந்துள்ளது. அடுத்த சில வருடங்களில் இந்தியா முதல் 3 உயர்ந்த பொருளாதார நாடுகளின் பட்டியலுக்குள் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

கடந்த காலத்தில் எந்த ஒரு நாடு வளர்ச்சி அடைய விரும்பினாலும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும். அதேபோன்று ஒரு சூழல் 2047-ம் ஆண்டு நாங்கள் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இருக்கும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.