இந்தியாவுக்கு செல்லும் இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு கவுன்சில்

இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதாக, தூதரக அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மோப்ப நாய்களுடன் டெல்லி போலீசார், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது காலியான நிலத்தில் கொடியுடன் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலின் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் “5 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்பு குழு டெல்லி போலீசாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது” எனத் தெரித்துள்ளார்.

இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என இந்தியா செல்ல இருக்கும இஸ்ரேல் நாட்டினருக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் மக்கள் அதிகமாக கூடும் மால்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ரெஸ்டாரன்ட், ஓட்டல், பப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என அடையாளப்படுத்தும் போன்ற அடையாளங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சகம் “இஸ்ரேல் பாதுகாப்பு குழுவுடன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.

ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 140 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news