இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இடம் பிடித்தார்.
ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்தின் ஸ்கோர் 8 ரன்னாக இருக்கும்போது ஆகாஷ் தீப் பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் கிராலி க்ளீன் போல்டானார். ஆனால் நோ-பால் என நடுவர் அறிவிக்க கிராலி அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
அதன்பின் கிராலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிராஜ் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் கிராலி தொடர்ந்து மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் சிராஜ் 19 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இங்கிலாந்து அணி 47 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ஆகாஷ் தீப் பந்தில் டக்கெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் வீசிய அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்னில் க்ளீன் போல்டானார். 4 ரன்னில் தப்பிய கிராலியை 42 ரன்னில் வீழ்த்தினார். அப்போது இங்கிலாந்து 57 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இந்தஜோ ஓரவிற்கு நிலைத்து நின்று விளையாடியது. பேர்ஸ்டாவ் விரைவாக ரன் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
22-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 35 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து 24.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது.
ஜோ ரூட் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.