இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் பிரிஸ்பேனில் தான் நடக்கும் – ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை குயின்ஸ்லாந்து மாகாணாத்தில் உள்ள பிரிஸ்பேனில் நடக்கிறது.

இதற்கிடையே பிரிஸ் பேனில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. வீரர்கள் மைதானம், ஓட்டல் அறையை தவிர வேறு எங்கும் செல்ல முடியாது. ஓட்டலில் தங்கி இருக்கும்போது தங்களது தளத்தை விட்டு வேறு தளத்துக்கு சென்று வீரர்களை கூட சந்திக்க முடியாது என்று கூறப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டு இருக்கும் நடைமுறைகளை மதித்து செயல்படுவதாக இருந்தால் மட்டுமே இந்திய அணி பிரிஸ்பேன் வரலாம். இல்லையென்றால் இங்கு வரவேண்டாம் என்று அந்த மாகாண சுகாதாரதுறை எச்சரித்து இருந்தது.

தனிமைபடுத்துவதற்கு இணையான இந்த கொரோனா தடுப்பு விதிமுறைகளால் பிரிஸ்பேனுக்கு சென்று விளையாட இந்திய அணி தயக்கம் காட்டியது.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து இருந்ததால் இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரகானே இந்த புதிய கெடுபிடிகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

இதற்கிடையே அங்கு கடந்த 72 மணி நேரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் பிரிஸ்பேனில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் 4-வது டெஸ்டை பிரிஸ்பேனில் விளையாடவே விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹோக்ளே தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி நாளை பிரிஸ்பேன் புறப்பட்டு செல்லும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools